வகுப்பில் திடீர் மாரடைப்பு 4ம் வகுப்பு மாணவர் பலி

சாம்ராஜ்நகர்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனித்து கொண்டிருந்த போதே, மாணவர் ஒருவர் மாரடைப்பால் பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் மாரடைப்பு இறப்புகள் அதிகரிப்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஹாசன், துமகூரு உட்பட, பல்வேறு மாவட்டங்களில், மாரடைப்பு இறப்புகள் நடக்கின்றன.

சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், தொட்டஹுன்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், நாகரத்னா தம்பதியின் மகன் மனோஜ், 10, குருபகேரியில் உள்ள தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இதய சம்பந்தப்பட்ட பிரச்னையால் மாணவர் அவதிப்பட்டார். இதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை வழக்கம் போன்று, பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மனோஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவர் உயிரிழந்தார்.

Advertisement