நீராதார வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

சின்னாளபட்டி: ஆலமரத்துப்பட்டியில் நான்கு வழிச்சாலை அருகே நீராதார வழித்தட ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் அகற்றினர்.
மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை ஓரங்களில் உள்ள நீர் வழித்தடங்களை பராமரிப்பதில் நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியம் காட்டி வந்தது. ஆக்கிரமிப்பு, வழித்தட மூடல் நடவடிக்கைகளால் நீராதாரங்களுக்கான தண்ணீர் வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. திண்டுக்கல் -பழநி ரோடு, கரூர்- திண்டுக்கல் ரோடு, நத்தம் -துவரங்குறிச்சி ரோடு மதுரை- திண்டுக்கல் ரோடு உள்ளிட்ட தடங்களில் நான்கு வழிச்சாலை புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல், காமலாபுரம் தடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமீபத்தில் நான்கு வழிச்சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது.
இவற்றில் பெரும்பாலான வழித்தடங்களில் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் பல இடங்களில் வாய்க்கால்கள் முழுமையாக மூடப்பட்டு நீர் ஆதாரங்களுக்கான வரத்து நீர் வழித்தடம் துண்டிக்கப்பட்டுள்ளது. தனியார் மட்டுமின்றி அரசு துறைகளும் ஆக்கிரமிப்பு, குறுகலான குழாய் பாலங்கள் அமைத்தல் மூலம் நீராதர போக்குவரத்தை பாதிக்கும் அம்சங்களை ஏற்படுத்தி உள்ளன. இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து ஆக்கிரமிப்பு பகுதிகள் கணக்கெடுப்பு சமீபத்தில் துவங்கியது. நேற்று நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் முன்னிலையில், மதுரை-திண்டுக்கல் ரோட்டில் ஆலமரத்துப்பட்டி அருகே அகற்றும் பணி நடந்தது. தடுப்பணை அருகே அகலத்தை பெருமளவு குறைத்து அமைக்கப்பட்டு இருந்த சிமென்ட் குழாய்களை அகற்றி அப்புறப்படுத்தினர்.
மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை மூலம் உரிய அளவீடு செய்து அனைத்து தடங்களிலும் நீர் வழித்தட வாய்க்கால்களை மேம்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.