தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத முதலிடத்தில் திமுக: உதயநிதி பேச்சு

திருவண்ணாமலை: தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
திருவண்ணாமலையில் தி.மு.க., பாக முகவர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது உதயநிதி பேசியதாவது;
தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களினால் நாட்டிலேயே வளரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். பா.ஜ,, அரசு என்றால் பாசிசம் இருக்கும். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., அரசை அடிமை மாடல் அரசு எனலாம்.
நமது அரசை திராவிட மாடல் அரசு என்று பெருமையாக சொல்கிறோம். ஆட்சி அமைந்தவுடனே முதல்வர் கையெழுத்திட்டது மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் தான். இந்த திட்டங்களினால் 4 மாதங்களில் மட்டும் 730 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றனர். அதுதான் அந்த திட்டத்தின் வெற்றி.
பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் புதுமைப்பெண் திட்டம். 8 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். முதல்வர் காலை உணவுத் திட்டத்தில் நல்ல தரமான உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள 20 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். 22 மாதங்களாக 1. 15 கோடி பேர் மாதம் தோறும் மகளிர் உரிமைத் தொகையை பெற்றுள்ளனர். இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க ஆரம்பிக்கப்படும்.
இந்த திட்டங்கள் பெரியளவில் தமிழகத்தில் வரவேற்பை பெற்றுள்ளதால் மத்திய அரசு தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற குறுக்கு வழி மூலம் ஹிந்தியை தமிழகத்தில் நுழைக்க பார்க்கின்றனர். மறு சீரமைப்பு என்று கூறி லோக்சபா தொகுதிகளை குறைக்க பார்க்கின்றனர்.
தமிழகத்தின் நிதி உரிமையை பறிக்கும் வேலைகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம்.
அடிமை அ.தி.மு.க., பா.ஜ., ஆட்சி தமிழகத்தில் வரக்கூடாது என்ற பிரசாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்.
ஓரணியில் தமிழகம் என்பதை முழுமையாக செய்துவிட்டாலே, 50 சதவீத வெற்றி உறுதி. இந்த இயக்கத்தின் கீழ் 10 நாட்களில் மட்டும் 91 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்த்துள்ளோம். அ.தி.மு.க.,வின் துரோகத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
இ.பி.எஸ்.,சுக்கு பதற்றம் வந்துவிட்டது, தி.மு.க.,வினர் தமிழக வாக்காளர்களின் கதவுகளை தட்டுவதாக ஓரணியில் தமிழ்நாடு பற்றி அவர் கிண்டலடித்துள்ளார். நாம் தமிழக மக்களின் வாக்காளர்களின் கதவுகளை உரிமையுடன் தட்டுகிறோம்.
இ.பி.எஸ்., மாதிரி அமித் ஷா வீட்டுக்கதவையோ, இல்லை கமலாலயம் வீட்டுக்கதவையோ யாரும் திருட்டுத்தனமாக தட்டவில்லை. மக்களுக்கு நல்லது செய்திருக்கிறோம் என்ற தைரியத்தில் கதவுகளை நாங்கள் தட்டுகிறோம்.
தமிழக மக்கள் தி.மு.க.,வை நோக்கி ஆதரவாக வருவதை பார்த்து அவருக்கு (இ.பி.எஸ்.) எரிச்சல் வருகிறது. இனி எந்த காலத்திலும் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு அடுத்த மாதமே டில்லி போய் கள்ளக்கூட்டணி வைத்தவர் இ.பி.எஸ்.
அமித் ஷா கூட்டணி ஆட்சி என்கிறார், ஆனால் மறுநாள் அது தனித்துவமான ஆட்சி தான் என்று இ.பி.எஸ்., கூறுகிறார். இப்படி அவர்களுக்கு உள்ளேயே ஒற்றுமை இல்லாத ஒரு நிலைமை போய்க் கொண்டு இருக்கிறது. இந்த கூட்டணி இப்படியே இருந்தால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது. எல்லாவற்றையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டு, சுயலாபத்துக்காக அமித் ஷாவிடம் ஒட்டுமொத்தமாக கட்சியை அடமானம் வைத்ததைக் கண்டு தமிழக மக்கள் சிரிக்கின்றனர். பிரசாரத்தை அவர் (இ.பி.எஸ்.) ஆரம்பிக்கும் போது வெள்ளை வேட்டி, சட்டையுடன் தான் ஆரம்பித்தார். ஆனால் இப்போது முழுசாக காவிச்சாயத்துடன் அவர் இருக்கிறார்.
தமிழகத்தில் பாஜ.,வுக்கு பாதை போட்டுக் கொடுக்கலாம் என்று பார்க்கிறீர்கள். தமிழக மக்கள் என்றைக்கும் அதை அனுமதிக்க மாட்டார்கள். தமிழக மக்கள் ஓரணியில் நின்றுகொண்டு அடிமைகளையும், பாசிசத்தையும் வீழ்த்த போவது உறுதி.
இவ்வாறு உதயநிதி பேசினார்.









