800 பாட்டில்களில் இருந்த மதுபானம் காலி: எலி குடித்து விட்டதாக கூறி ஏமாற்றிய வர்த்தகர்கள்

ராஞ்சி: ஜார்க்கண்டின் தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் இருந்த 800 பாட்டில் மதுபானம் மாயமானது. அதனை எலி குடித்து விட்டதாக வர்த்தகர்கள் விட்ட கதையை நம்பாத அதிகாரிகள் , இழப்பை சரி செய்வதற்கு பணத்தை செலுத்தும்படி உத்தரவிட்டு உள்ளனர்.
ஜார்க்கண்டில் வரும் செப்., 1 ம் தேதி முதல் புதிய மதுபானக் கொள்கைகள் அமலாக உள்ளது. இதன்படி கடை ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த முறையில், அதனை ஆன்லைன் குலுக்கல் முறைக்கு மாற்றப்பட உள்ளது. இதன்மூலம் வருவாயில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன், அரசுக்கு உள்ள நெருக்கடி குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய விதிமுறைகள் அமலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் காட்டப்படவில்லை என்பதை அறிந்தனர்.
இது குறித்து மதுபான கடைகளை நடத்தி வருபவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் அளித்த பதிலைக் கேட்ட அதிகாரிகளுக்கு மயக்கம் வரும் நிலை ஏற்பட்டது. அதாவது, அந்த பாட்டிலில் இருந்த மூடியை எலிகள் தின்றுவிட்டு மதுபானம் அனைத்தையும் குடித்து விட்டன எனத் தெரிவித்தனர். அவர்கள் 'அளந்து ' வி ட்ட கதையை அதிகாரிகள் நம்பவில்லை. மதுபானம் விற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.
இவ்வாறு ஊழலுக்கு எலிகள் மீது குற்றம்சாட்டப்படுவது ஜார்க்கண்டில் இது முதல்முறை அல்ல. போலீஸ் பிடியில் இருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 9 கிலோ கஞ்சா இலைகளை காணவில்லை. அவற்றை எலி தின்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்காத நீதிமன்றம் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.










