அமைச்சரின் உதவியாளர் மீது தாக்குதல் தி.மு.க., ஒன்றிய செயலர் மீது வழக்கு உதவியாளர் மீதும் வழக்கு

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், தி.மு.க., மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சரின் உதவியாளர் டோனி தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக இருதரப்பிலும் தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரில்பேரில் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா ஆதரவாளர் ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், உதவியாளர் டோனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதுகுளத்துாரில் உள்ள தனியார் மகாலில் ஓரணியில் தமிழ்நாடு குறித்து தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இத்தொகுதி எம்.எல்.ஏ., வான அமைச்சர் ராஜகண்ணப்பன் உதவியாளர் டோனி இதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது அங்கு வந்த தி.மு.க., மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளரான கடலாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் ஆகியோர் டோனியை தாக்கினர்.

இதில் காயம் அடைந்த டோனி, முரளிதரன் முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் மகாலில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். தி.மு.க.,வினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ வைரலானது.

மோதல் பின்னணி



டோனி புகாரில் பேரில் ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் மீதும், முரளிதரன் புகாரில் பேரில் டோனி மீதும் எஸ்.ஐ., வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

டோனிக்கும், மாயகிருஷ்ணனுக்கும் டெண்டர் எடுப்பதில் பிரச்னை இருந்தது. தன்னை மிரட்டியதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலீஸ் எஸ்.பி.,யிடம் டோனி புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., ஒன்றிய செயலாளரை கைது செய்ய வலியுறுத்தி தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

Advertisement