செவ்வாய் கிரக கல்; டைனோசர் எலும்புக்கூடு அமெரிக்காவில் விசித்திர பொருட்கள் ஏலம்

2

நியூயார்க்: பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அளவிலான கல்லை, நியூயார்க்கை சேர்ந்த நிறுவனம், 1.7 கோடி ரூபாய் ஆரம்ப தொகைக்கு ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.

பூமியின் மீது அவ்வப்போது விண்கற்கள் விழும் சம்பவங்கள் நடக்கின்றன.

விண்கல் வேட்டை



இவை குறித்த தகவல்களை, அமெரிக்க விண்கல் சங்கம் மற்றும் சர்வதேச விண்கல் அமைப்பின் வாயிலாக கண்காணித்து அவற்றை தேடிச்செல்வதை அறிவியல் ஆர்வலர்கள் பொழுதுபோக்காகவும், முழுநேர பணியாகவும் வைத்துள்ளனர். அவ்வாறு விண்கல் ஆய்வாளர்களால், மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் விண்கல் ஒன்று கடந்த 2023 நவம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதை கண்டுபிடித்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்த கிரகமான செவ்வாயில் மிகப்பெரிய விண்கல் மோதல் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து இந்த கல் பிரிந்து 22 கோடி கி.மீ., பயணித்து பூமியை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 25 கிலோ எடையிலான இந்த கல், பூமியில் இருக்கும் செவ்வாய் கிரக கற்களில் மிகப்பெரியது.

அதிலிருந்து சிறிய பகுதிகளை பிரித்து ஆய்வுக்காக சிறப்பு ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பினர். அதில், இது செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த கல் என்பது உறுதியானது.

௧௫ கோடி ஆண்டு



இதன் மேற்பகுதி, கண்ணாடி போன்று பளபளப்பாக காணப்படுகிறது. பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த போது அதிக வெப்பத்தால் எரிந்து இவ்வாறு உருமாறியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

செவ்வாய் கிரக கல்லுடன் சேர்ந்து நியூயார்க்கின் ஏல நிறுவனம், குட்டி டைனோசரின் எலும்பு கூட்டையும் ஏலத்திற்கு வைத்து உள்ளது.

ஆறு அடி உயரம் மற்றும் 11 அடி நீளம் உள்ள இது, அமெரிக்காவின் வியோமிங் மாகாணத்தில் 1996ல் கண்டுபிடிக்கப்பட்டது. 15 கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது.

இதற்கு ஆரம்ப ஏல தொகையாக, 3.3 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளனர். இந்த இரண்டு பொருட்களும், 16ம் தேதி ஏலத்திற்கு வருகின்றன.

Advertisement