இந்தியா வெற்றிக்கு தேவை 135 ரன்... * 'விறுவிறு' கட்டத்தில் லார்ட்ஸ் டெஸ்ட்

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி வெற்றிக்கு 135 ரன் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட் உள்ளது. இன்று ராகுல், ரிஷாப் பன்ட் உள்ளிட்ட பேட்டர்கள் பொறுப்பாக ஆடினால், வெற்றி பெறலாம்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் இரு போட்டி முடிவில், தொடர் 1-1 என சமனில் உள்ளது.
மூன்றாவது போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387, இந்தியா 387 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 2/0 ரன் எடுத்திருந்தது.
சிராஜ் மிரட்டல்
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய பவுலர்கள் போட்டுத்தாக்க, இங்கிலாந்து விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. சிராஜ் 'வேகத்தில்' டக்கெட் (12) நடையை கட்டினார். தொடர்ந்து மிரட்டிய இவர், போப்பிற்கு எதிராக எல்.பி.டபிள்யு., கேட்டார். ஆனால், அம்பயர் மறுத்தார். தனது முடிவில் நுாறு சதவீதம் உறுதியாக இருந்த சிராஜ், 'ரிவியு' கேட்கும்படி கேப்டன் சுப்மன் கில்லிடம் வலியுறுத்தினார். அவரும் சைகை காண்பித்தார். 'ரீப்ளே'வில் பந்து மிடில் 'ஸ்டம்ப்சை' தகர்ப்பது உறுதியாக, சிராஜ் ஆர்ப்பரித்தார். போப் (4) வெளியேறினார். நிதிஷ் குமார் பந்தில் கிராவ்லி (22) அவுட்டானார்.
ஹாரி புரூக் சிறிது நேரம் 'பாஸ் பால்' முறையில் அதிரடி காட்டினார். ஆகாஷ் தீப் ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். தனது அடுத்த ஓவரில் புரூக்கை (23) போல்டாக்கி பதிலடி கொடுத்தார் ஆகாஷ் தீப். அப்போது இங்கிலாந்து 87/4 ரன் எடுத்து தத்தளித்தது. பின் அனுபவ ஜோ ரூட், கேப்டன் ஸ்டோக்ஸ் போராடினர். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 98/4 ரன் எடுத்திருந்தது.
வாஷிங்டன் 4 விக்.,
இதற்கு பின் அடித்து ஆடுவதா அல்லது அடக்கி வாசிப்பதா என்ற குழப்பத்தில் இருந்த இங்கிலாந்து பேட்டர்களை தனது 'சுழல்' மந்திரத்தால் சிதறடித்தார் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர். இவரது பந்தை 'ஸ்வீப்' செய்ய முயன்ற அனுபவ ஜோ ரூட் (40) முதலில் போல்டானார். அடுத்த ஓவரில் 'ஆபத்தான' ஜேமி ஸ்மித்தை (8) போல்டாக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பின் கேப்டன் ஸ்டோக்சையும் (33) போல்டாக்கினார் வாஷிங்டன்.
'டெயிலெண்டர்கள்' பும்ராவிடம் 'சரண்டர்' ஆகினர். இவரது 'வேகத்தில்' கார்ஸ் (1) போல்டாக, இங்கிலாந்து 182/8 ரன் எடுத்து தத்தளித்தது. பும்ரா பந்தில் வோக்ஸ் (10) 'ஸ்டம்ப்சும்' தகர்ந்தது. கடைசியில் சோயப் பஷிரை (2) போல்டாக்கிய வாஷிங்டன் தனது நான்காவது விக்கெட்டை பெற்றார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
விக்கெட் சரிவு
பின் 193 ரன் எடுத்தால் வெற்றி என இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் (0), கருண் (14), சுப்மன் (6) ஏமாற்றினார். 4வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 58/4 ரன் எடுத்திருந்தது. ராகுல் (33) அவுட்டாகாமல் இருந்தார்.
சேஸ் செய்ய முடியுமா
லார்ட்ஸ் மைதானத்தில் 192 ரன்னுக்கும் மேல் என்ற இலக்கை, 1965, 2004, 2022 என 3 முறை இங்கிலாந்து, 1984ல் வெஸ்ட் இண்டீஸ், 2025ல் தென் ஆப்ரிக்கா என 3 அணிகள் வெற்றிகரமாக சேஸ் செய்தன. இம்முறை இந்தியா சாதித்தால் முதல் ஆசிய அணி ஆகலாம்.
லார்ட்சில் முதன் முறையாக...
லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் சாய்த்த சுழற்பந்து வீச்சாளர் ஆனார் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர். இவர் நேற்று 4 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன் இங்கிலாந்தின் சுவான் (3 விக்., எதிர்-ஆஸி., 2009), மொயீன் அலி (3, எதிர்-தெ.ஆப்.,, 2017), பாகிஸ்தானின் யாஷிர் ஷா (3, எதிர்-இங்கிலாந்து, 2016), தலா 3 விக்கெட் சாய்த்துள்ளனர்.
* இங்கிலாந்தின் 3 அல்லது அதற்கும் மேல் போல்டாக்கிய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆனார் வாஷிங்டன் சுந்தர்.
இது அதிகம்
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தின் 12 வீரர்களை போல்டு செய்து சாதனை படைத்தது இந்தியா. இதற்கு முன் 10 'போல்டு' (எதிர், இங்கிலாந்து, 2024, ஐதராபாத்) செய்திருந்தது. 1960க்கு பின் டெஸ்டில் ஒரு அணி 12 'போல்டு' செய்தது இதுவே முதல் முறை.
* ஒரு இன்னிங்சில் முதல் முறையாக நேற்று 7 பேரை 'போல்டு' செய்தது இந்தியா. இதற்கு முன் 8 முறை ஒரு இன்னிங்சில் 6 'போல்டு' செய்துள்ளது.
மேலும்
-
77 ரயில்களின் சேவை பாதிப்பு
-
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி பலி கார் பலத்த சேதம்
-
விருந்துக்கு சென்ற இடத்தில் தகராறு பீர் பாட்டிலால் ஒருவர் குத்திகொலை
-
பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டி கேட்டவர் வீடு மீது பெட்ரோல் குண்டு 4 பேர் கைது
-
மகனை கொன்று தந்தை தற்கொலை
-
'சார்ஜிங்' மையத்தில் புகுந்த கார் மோதி சிறுவன் பலி