கரையெங்கும் குப்பை மலை

ஆற்றங்கரையில், ஊராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கு திறந்துள்ளதை, கலெக்டர் நேரில் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, 15 வார்டுகளை கொண்டது; மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளதால், மக்கள் தொகை பெருக்கம் அதிகம். இதனால், குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை பணிகள் கடும் சவாலாக மாறியுள்ளது.

வீடு வீடாக சேகரிக்கும் குப்பையை என்ன செய்வதென தெரியாமல், கிடைக்கும் இடங்களில் கொட்டி அழிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, மங்கலம் பகுதியில் சேகரமாகும் குப்பை, அவிநாசி ரோடு அருகே, நொய்யல் கரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் குப்பை அதிகரித்து மலைபோல் குவிந்துள்ளது; சிறிய காற்று வீசினாலும், பாலிதீன் குப்பைகள் பறந்து போய் ஆற்றில் விழுகின்றன. இதேநிலை தொடர்ந்தால், ஆண்டிபாளையம் படகுக்குழாம், திருப்பூர் நகரப்பகுதியில் நொய்யல் ஆறு மாசுபடும் அபாயம் உள்ளது.

மங்கலத்தில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள், நொய்யல் கரையோரமாக குப்பை கொட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

விவசாயிகள் கூறுகையில், 'நொய்யல் கரையில் குப்பைகொட்டுவதால், ஒட்டுமொத்த ஆறும் மாசுபடும். இதேநிலை தொடர அனுமதிக்க கூடாது. கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, மங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். திடக்கழிவுகளை அப்புறப்படுத்தி, நொய்யல் ஆற்றை பாதுகாக்க முன்வர வேண்டும்,' என்றனர்.

*

---

3 காலம்

மங்கலம், நொய்யல் கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

Advertisement