ரயில்வே மேம்பால பகுதியை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

கும்மிடிப்பூண்டி:எளாவூர் ரயில்வே மேம்பாலத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக எளாவூர், சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், ராக்கம்பாளையம், மேலகழனி உட்பட, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

எளாவூர் பகுதியில் மேம்பாலம் துவங்கும் இடத்தில், சாலையை ஆக்கிரமித்து எப்போதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சில வாகனங்கள் மாத கணக்கில் நிறுத்தப்பட்டுஉள்ளன.

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால், அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஆரம்பாக்கம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த தடைவிதிக்க வேண்டும்.

மேலும், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதை மீறி வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement