ஸ்ரீவி., புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் நான்கு வனச்சரகங்களில் வருடாந்திர புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இருந்தபோதிலும் ஆண்டுக்கு ஒரு முறை மாநில வனத்துறையால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புலிகளின் எண்ணிக்கை, நடமாட்டம் ஆகியவற்றை பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் 4 வன சரகங்களிலும் இன்று முதல் 7 நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.

இதற்காக புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் தலைமையில் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் வனச்சரகர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.

நான்கு வனச்சரகங்களிலும் ஒவ்வொரு பீட்டிலும் நவீன ரக கேமராக்கள்பொருத்தப்பட்டு புலிகள்நடமாட்டம், காலடித்தடங்கள், எச்சங்கள் சேகரிக்கப்படுகிறது. ஏழு நாட்களுக்கு பிறகு சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, வனப்பகுதியில் வசிக்கும் புலிகள் எண்ணிக்கைகள், வாழ்வியல் சூழல் குறித்து தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement