ஒரு தலைக்காதல் சரிப்பட்டு வராது; பீஹார் தேர்தலில் இண்டி கூட்டணியை நிராகரித்தார் ஓவைசி

3

ஹைதராபாத்: பீஹார் தேர்தலில் இண்டி கூட்டணியுடன், கூட்டணி வைக்க முடியாது என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக, ஒரு நிகழ்ச்சியில் ஒவைசி பேசியதாவது: ஒருதலைக்காதல் செய்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே இண்டி கூட்டணியுடன் கூட்டு சேர நாங்கள் விரும்பவில்லை. பீஹார் மக்கள் எங்களுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், பொய்யானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர், தங்கள் அரசியல் தலைமையாக மாறுவதை பிற கட்சியினர் விரும்பவில்லை. பீஹார் மக்கள் தங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்.


நாங்கள் தேர்தல்களை சிறப்பாக எதிர்கொள்வோம். எங்கள் பீஹார் மாநில தலைவர் அக்தருல் இமான், மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட குரல்களை அடக்குவதற்காக போட்டி கட்சிகள் எங்கள் கட்சியை குறி வைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில், மகா கூட்டணியில் ஏஐஎம்ஐஎம்.,ஐ சேர்க்குமாறு ஆர்.ஜே.டி., தலைவர் லாலு யாதவுக்கு அக்தருல் இமான் ஒரு கடிதம் எழுதினார். இருப்பினும், பீஹார் தேர்தலில் இருந்து விலகி இருக்குமாறு ஆர்.ஜே.டி., ஒவைசியின் கட்சியை கேட்டுக் கொண்டுள்ளது.


கடந்த 2020ம் ஆண்டு தேர்தலில், பீஹாரின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள சீமாஞ்சல் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி உடன் கூட்டணி அமைத்து ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஐந்து இடங்களை வென்றது. இருப்பினும், ஒரு எம்.எல்.ஏ.,வைத் தவிர மற்ற அனைவரும், 2022ல் ஆர்ஜேடியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement