அகமலை உண்டு உறைவிட பள்ளிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் மலைகிராமத்தினர் மனு

தேனி: அகமலை உண்டு உறைவிட பள்ளிக்கு மின் இணைப்பு வழங்க கோரி மலைகிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 498 மனுக்களை அளித்தனர்.

கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சாந்தி, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அகமலை சொக்கனலை கிராம தலைவர் செல்வம் தலைமையில் பொதுமக்கள் வழங்கிய மனுவில், 'அகமலையில் உண்டு உறைவிட பள்ளியில் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இரவு மின் விளக்கு தேவைக்கு சோலார் விளக்குகள் உள்ளன.

ஆனால், அவை பாதுகாப்பிற்கு போதியதாக இல்லை. இதனால் அப்பள்ளிக்கு மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரினர்.

கிராம மக்கள் கூறுகையில், 'பள்ளிக்கு தேவையான குடிநீர் அருகில் உள்ள ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நீர் வரத்து இல்லாததால் மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர். ஆழ்துளை கிணறு இருந்தும் மின் இணைப்பு இல்லாததால் தண்ணீர் பிரச்னை பள்ளியில் நிலவுகிறது,' என்றனர்.

மற்றொரு மனுவில், 'பழங்குடியினர் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமரின் விவசாயிகள் கவுரவத்தொகை இவற்றில் பலனடைய முடியவில்லை. புல எண் வழங்கவும், விவசாய அடையாள எண் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருந்தது.

பட்டதாரி சான்றிதழ் பெற முடியவில்லை



ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லுாரி முன்னாள் மாணவர் சூர்யா மனுவில், ஆண்டிபட்டி அரசு கலை கல்லுாரியில் 2018- 2021ம் ஆண்டு வரை இளநிலை அறிவியல் இயற்பியல் துறையில் படித்தேன்.கடந்தாண்டு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன். ஆனால் இதுவரை பட்டதாரி சான்றிதழ், அகமதிப்பெண் சான்றிதழ் பெற முடிவில்லை. சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரினார்.

குவாரி அமைக்க எதிர்ப்பு



குள்ளப்புரம் பொதுமக்கள் சார்பாக தேவகி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே 5 கல்குவாரிகள் உள்ளன. இந்நிலையில் தற்போது புதிய குவாரிகள் அமைக்க முயற்சிகள் நடக்கிறது. குவாரி அமைந்தால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படும். அப்பகுதியில் புதிய குவாரி அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊர்வலம்காங்., கட்சி பழங்குடியினர் பிரிவு மாவட்ட தலைவர் இனியவன் தலைமையில் அல்லிநகரம் கண்டமனுார் உள்ளிட்ட பல்வேற பகுதிகளில் இருந்து இலவச வீட்டு மனை பட்டா கோரி பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். அனைத்து மனுக்களையும் பெற்று ஒரு சிலர் மட்டும் மனு அளிக்க செல்லும் படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அனைவரும் தனித்தனியாக மனு கொண்டு வந்துள்ளோம் என கூறி அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் ஊர்வலமாக சென்று மனுக்களை அளித்தனர்.

Advertisement