கடன் தொல்லையால் பஸ் டிரைவர் தற்கொலை

எண்ணுார், கடன் தொல்லையால், மாநகர பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்துக் கொண்டார்.

எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார், 48; மாநகர பேருந்து ஓட்டுநர். இவரது மனைவி வனஜா. வீட்டருகே மளிகை கடை வைத்துள்ளார்.

இவர்களுக்கு ரூபேஷ், 17, என்ற மகனும், நித்திலா, 14, என்ற மகளும் உள்ளனர். ஒரு வாரத்திற்கு முன், மகள் நித்திலாவை, சிலம்பம் போட்டியில் பங்கேற்க செய்வதற்காக, வனஜா அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரமேஷ்குமார், மனைவியின் கடைக்கு சென்று ஷட்டரை திறந்துள்ளார்.

அப்போது, அவ்வழியே சென்ற பெண் ஒருவரிடம், தான் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக கூறி, ஷட்டரை அடைத்து விட்டார்.

பயந்து போன அப்பெண், தன் மகன் உதவியுடன் ஷட்டரை திறந்து பார்த்தபோது, ரமேஷ் கடையினுள்ளே, ஷாம்பு, மசாலா பாக்கெட்டுகள் தொங்கவிடப்பட்டிருக்கும் இரும்பு கம்பியில், துாக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றிருந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் ரமேஷ் குமார் இறந்தது தெரிய வந்தது..

எண்ணுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், ரமேஷுக்கு, 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மன வருத்தத்தில் இருந்தவர், தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என, போலீசார் கூறினர்.

Advertisement