ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு கஞ்சா அடித்த 10 பேர் கைது
சென்னை,
பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஒட்டலில் ரூம் போட்டு, கஞ்சா பயன்படுத்தி வந்த 10 பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர்.
சென்னை, பட்டினப்பாக்கத்தில், 'சோமர் செட்' என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு தங்கியுள்ள சிலர் கஞ்சா பயன்படுத்தி வருவதாக, ஓட்டல் மேலாளர், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
பட்டினப்பாக்கம் போலீசாரும், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரும், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சூளையைச் சேர்ந்த ஜெகதீஸ்வர், 34, கொளத்துாரை சேர்ந்த சந்தோஷ், 27, தீபக், 27 உட்பட, 10 பேர் கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், 5 கிராம் கஞ்சா, 48 மில்லி கிராம் ஓ.ஜி., கஞ்சா, 11 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:
கைதான ஜெகதீஷ்வரன் சில நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அதற்காக, நண்பர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளித்துள்ளார். அப்போது, கஞ்சா பயன்படுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது யார்; யார், யாருடன் மொபைல் போனில் பேசியுள்ளனர். போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்றெல்லாம் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
***