தி.மு.க.,வின் துரோகத்தை அம்பலப்படுத்த அன்புமணி அழைப்பு

சென்னை : பா.ம.க.,வினருக்கு அக்கட்சி தலைவர் அன்புமணி எழுதியுள்ள கடிதம்:


வன்னியர்களுக்கு துரோகம் இழைக்கும் தி.மு.க., அரசு, அவர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க மறுத்து வருகிறது.


வன்னியர் இடஒதுக்கீடு பற்றி பரிந்துரைக்க, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட மூன்று மாத கால அவகாசம், 30 மாதங்களான பின்னும், மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூன்று மாதங்களில் பரிந்துரை வழங்கியிருந்தால், கடந்த நான்கு ஆண்டுகளில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., 3,600 பேர்; பொறியியல் படிப்புகள் 6,000; கலை - அறிவியல் கல்லுாரி இடங்கள் 80,000 கிடைத்திருக்கும்; 5,000க்கும் அதிகமான வன்னியர்களுக்கு அரசு வேலை கிடைத்திருக்கும்.

இந்நிலையில், வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது என்று, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தி தலைமையில் நடந்த இசை வேளாளர்கள் சங்க மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.



இதற்கு பின்பும் அமைதியாக இருப்பது சரியல்ல. எனவே, வன்னியர் இடஒதுக்கீட்டை பெற, வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட வரும் 20ம் தேதி, விழுப்புரத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க., வினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement