போதைப்பொருள் வழக்கில் கர்நாடக காங்., தலைவர் கைது

4

பெங்களூரு : கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு நெருக்கமான கலபுரகி தெற்கு பிளாக் காங்கிரஸ் தலைவர் லிங்கராஜ கன்னே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மஹாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கலபுரகி தெற்கு பிளாக் காங்கிரஸ் தலைவர் லிங்கராஜ கன்னே. இவர் இதற்கு முன், பா.ஜ.,வில் இருந்தார். 2023 சட்டசபை தேர்தலின்போது காங்கிரசில் இணைந்தார். மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே, கலபுரகி தெற்கு காங்., - எம்.எல்.ஏ., அல்லம பிரபுவுக்கு மிகவும் நெருக்கமானவர்.


இந்நிலையில், மஹாராஷ்டிராவின் தானேவில் நேற்று காலை போதைப்பொருள் விற்பனைக்காக லிங்கராஜ கன்னே சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.



அவரிடம் இருந்து, தடை செய்யப்பட்ட 'கோடின்' போதை மருந்து கலந்த 20க்கும் மேற்பட்ட சிரப் பாட்டில்கள், 'ஷெட்யூல் - ஹெச் டிரக்ஸ்' எனப்படும் டாக்டர் பரிந்துரையின்றி கடைகளில் வாங்க முடியாத மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை போதைக்காக பலர் பயன்படுத்துகின்றனர்.


இவருடன் சேர்த்து தவுசிப் ஆசீப், சையத் இர்பான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லிங்கராஜ கன்னே கைதானதை தொடர்ந்து, இவர் அமைச்சர் பிரியங்க் கார்கேவுடன் சேர்ந்திருக்கும் படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


இது, கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திஉள்ளது. இதையடுத்து, லிங்கராஜ கன்னேவை கட்சியில் இருந்து நீக்கி, கலபுரகி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜகதேவ் குத்தேதார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement