விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு அச்சத்தில் மூடப்பட்ட 300 பட்டாசு ஆலைகள்

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதால் 300 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்ததுடன் பட்டாசுக்கும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இம்மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும் வேலை செய்கின்றனர்.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் சமீப நாட்களாக தொடர் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாகும் நிலை தொடர்கிறது. 2025 ல் ஏழு மாதங்களில் மட்டும் 14 வெடி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டு வரும் நிலையில் இனி ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்து கூட நடக்க கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் 10 நாட்களுக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் விதிமீறல் இருந்தால் ஆலையை மூடுவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுக்கலாம் எனவும் பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு செய்ய கலெக்டர் சார்பில் 15 ஆய்வு குழுக்கள், மத்திய வெடிபொருள் பெட்ரோலியம் கட்டுப்பாட்டு அலுவலகம் (பெசோ) சார்பில் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டு இன்று முதல் ஆய்வு நடைபெற உள்ள நிலையில் சிவகாசி, வெம்பக்கோட்டை, எம்.புதுப்பட்டி, நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 300 பட்டாசு ஆலைகள் ஆய்வு அச்சத்தால் மூடப்பட்டுள்ளன.

ஆய்வில் விதிமீறல் இருந்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் பட்டாசு ஆலைகளை மூடி உள்ளதாக தெரிகிறது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். ஏற்கனவே 80 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இயங்காத நிலையில், தற்போது 300 ஆலைகள் வரை மூடப்பட்டுள்ளதால் நடப்பு ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுக்கும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிவகாசி பகுதியில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலை.

Advertisement