அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படும் புறநகர் பகுதிகள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக மக்கள் அல்லல் படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திருக்குமரன் நகர், இபி., காலனி, இந்திரா நகர், மணி நகர், ஆனந்தபுரி நகர், சிலோன் காலனி, ராஜீவ் நகர், வேல்முருகன் காலனி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட புறநகர் பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் 5 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. புறநகர் பகுதிகள் உருவாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் குடிநீர், ரோடு, வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. ஆனந்த புரி நகர் தெருக்களில் வாறுகால் ,ரோடு இல்லை. மழை காலங்களில் மழைநீர், கழிவுநீர் கலந்து தெருக்களில் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது.
மணி நகரில் குடிநீர் குழாய் பதிக்க ரோட்டை தோண்டி விட்டு பணி முடிந்ததும் சரி செய்யாமல் கிடப்பில் போட்டதால் 5 ஆண்டுகளாக ரோடு மேடும் பள்ளமுமாக உள்ளது. இந்தப் பகுதியில் ஊராட்சி தண்ணீரையும் தாமிரபரணி குடிநீரையும் கலந்து வழங்குவதால் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என மக்கள் புலம்புகின்றனர். வேல்முருகன் காலனியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. மழைக்காலத்தில் இந்தப் பகுதி வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
தெருக்கள் சகதியாக இருப்பதால் நடக்க முடியாமல் உள்ளது. இந்தப் பகுதியில் பொது கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படவில்லை. புறநகர் பகுதிகளுக்கு தனியாக நிதி ஒதுக்கி தேவையான வசதிகளை செய்து தர ஊராட்சி கவனம் செலுத்த வேண்டும். தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. புறநகர் பகுதிகளில் பல தெருக்களில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வீடுகளில் திருட்டுச் சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது.
ரோடு, வாறுகால் அவசியம்
சந்தனமேரி, குடும்பதலைவி: பாலையம்பட்டி ஊராட்சி நிர்வாகம் புறநகர் பகுதிகளை புறக்கணிக்கிறது. நாங்கள் வசிக்கும் ஆனந்தபுரி நகரில் தெருக்களில் ரோடு, வாறுகால் வசதி இல்லை. பலமுறை ஊராட்சியில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கற்கள் பெயர்ந்த ரோட்டில் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்களும் டூவீலர்களும் சிரமப்பட்டு செல்கின்றன மழைக்காலமானால் ரோட்டில் நடக்க முடியவில்லை. எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
வரிகள் கட்டுகிறோம் வசதிகள் இல்லை
தனலட்சுமி, குடும்பதலைவி: பாலையம்பட்டிக்கு ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதி மக்கள் அரசுக்கு தேவையான வரிகளை தவறாமல் கட்டுகிறோம். ஆனால் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து வருவதில் ஊராட்சி மெத்தனம் காட்டுகிறது. ஆண்டுகள் கடந்தும் எந்தவித வசதிகள் இன்றி நாங்கள் சிரமப்படுகிறோம். ரோடு, வாறுகால், குடிநீர் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.
போராடியும் பலனில்லை
குணசேகரன், சமூக ஆர்வலர்: பாலையம்பட்டி ஊராட்சியில் அதிகமான புறநகர் பகுதிகள் உள்ளன. இன்னும் உருவாகிக் கொண்டே செல்கிறது. பல ஆண்டுகள் ஆனாலும் புறநகர் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது இல்லை. மக்களும் போராடி சலித்து விட்டனர். ஊராட்சி நிர்வாகம் புறநகர் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான வளர்ச்சிப் பணிகளை செய்ய நிதி ஒதுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் புறநகர் பகுதிகளை ஆய்வு செய்து தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
-
அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
-
சிதம்பரம் வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளரை வரவேற்க பாண்டியன் எம்.எல்.ஏ., அழைப்பு