மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்த பஞ்சாயத்தில்...மாற்று அமைச்சர்கள் 'லாபி': தி.மு.க., அமைப்பு செயலாளரிடம் நிர்வாகிகள் முறையீடு

மதுரை: மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் பிற மாவட்ட அமைச்சர்கள் 'லாபி'யால் மண்டலத் தலைவர்கள் பதவிகளை நிரப்ப முடியவில்லை போன்ற உட்கட்சி பிரச்னைகள் குறித்து தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் மதுரை நிர்வாகிகள் முறையிட்டனர்.
மாநகராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான தனியார் கட்டடங்களுக்கு ரூ.பல கோடிக்கு சொத்துவரியை குறைத்து நிர்ணயித்து முறைகேடு செய்தது தொடர்பாக மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். முன்னாள் உதவி கமிஷனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். முறைகேடு எதிரொலியாக ஆளுங்கட்சியை சேர்ந்த 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக மதுரை வந்த தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர். காலியாக உள்ள மண்டலத் தலைவர்களை தேர்வு செய்வதில் வேறு மாவட்டங்களை சேர்ந்த இரண்டெழுத்து, மூன்றெழுத்து பெயர் கொண்ட 2 மூத்த அமைச்சர்கள் உதவியுடன் உள்ளூர் நிர்வாகிகள் 'லாபி' செய்கின்றனர். புதிய மண்டல தலைவர்களை நியமிக்க மறைமுகமாக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் உள்ளிட்ட பிரச்னைகளை பாரதியிடம் கொட்டினர்.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கட்சி நடவடிக்கை எடுத்தால் அதற்கான பின் விளைவுகள் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்ய ஆர்.எஸ். பாரதி சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் முகாமிடுவது வழக்கம். அதுபோல், 5 மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய வைத்ததால் மதுரை நிலவரம் குறித்து அறிய அவர் முகாமிட்டார். மாவட்ட செயலாளர் உட்பட 30க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் அவரிடம் நேரிலும், அலைபேசியிலும் கருத்து தெரிவித்தனர்.
மண்டல தலைவர்கள் நீக்கத்திற்கு பின் மாவட்ட நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக கட்சி, தலைவர்களை சரமாரியாக விமர்சிக்கின்றனர். புதிய மண்டல தலைவர்களை நியமிப்பதில் வேறு மாவட்ட அமைச்சர்கள் இருவரின் உதவியுடன் முட்டுக்கட்டை போடுகின்றனர். மண்டல தலைவர் ராஜினாமாவால் நிர்வாகிகள் சிலருக்கு தவிர கட்சிக்குள் அதிருப்தி இல்லை. இதுவரை புகாரில் சிக்காத கவுன்சிலர்களுக்கு புதிய மண்டல தலைவர் வாய்ப்பு வழங்க வேண்டும். முறைகேடு குறித்து போலீஸ் நேர்மையுடன் விசாரித்து, கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வரும் சட்டசபை தேர்தலில் கட்சிக்கு நற்பெயர் கிடைக்கும் உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்தனர் என்றனர்.
மேலும்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
-
அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
-
சிதம்பரம் வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளரை வரவேற்க பாண்டியன் எம்.எல்.ஏ., அழைப்பு