மலையில் நாள்தோறும் மயங்கும் குடிமகன்களால் முகம் சுளிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் நாள்தோறும் மது போதையில் மயங்கும் குடிமகன்களால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை அதிகரித்து வருகிறது.
விவசாயம்,சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வருகின்றனர். இயற்கை அழகை ரசிக்க வருகை தருபவர்கள் முதலில் காணும் நிலை மதுபோதையில் மயங்கி கிடக்கும் குடிமகன்களின் அலங்கோல நிலையே. பஸ் ஸ்டாண்டில் தொடங்கி செவன் ரோடு, உட்வில் ரோடு, கிளப் ரோடு, அண்ணா சாலை, மூஞ்சிக்கல், கோக்கர்ஸ்வாக் , கலையரங்கம், நாயுடுபுரம் டிப்போ, தாலுகா அலுவலகம், பஸ் ஸ்டாப்களில் காணும் நிலை உள்ளது. மேலும் பார்கள் இருந்த போதும் குடிமகன்கள் பொது இடங்களில் மது குடிக்கும் போக்குள்ளது.
இவர்கள் விட்டு செல்லும் உணவு பொட்டலம், பாட்டில்கள் குப்பை குவியல்கள் நிரம்பி வழிகின்றன. மக்கள் நடமாடும் பகுதியில் குடிமகன்கள் இயற்கை உபாதை புரிவது, அரை நிர்வாணம், தகாத பேச்சு என அனைத்துத் தரப்பினரையும் முகம் சுளிக்க வைக்கிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியை பொறுத்தமட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை கட்டுப்பாடற்று நடக்கிறது. சுற்றுலா நகரின் மாண்பிற்கு களங்கம் விளைவிக்கும் இந்நிலையை தவிர்க்க போலீசார் , நகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டால் மட்டுமே இந்நிலை தவிர்க்க முடியும்.
கண்காணிக்கலாமே
தனமுருகன், இயற்கை ஆர்வலர்: கொடைக்கானல் நகரில் குடிமகன்கள் மயங்கி கிடக்கும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. போதையால் இளைஞர்கள் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போலீஸ் , நகராட்சி இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும்.
வேலி அமைக்கலாமே
தினகரன், இயற்கை ஆர்வலர்: சுற்றுலா நகருக்கு வருகை தருவோரின் மனநிலையை பாதிக்கும் வகையில் பஸ் ஸ்டாண்டில் இத்தகைய அவல நிலையை காண முடிகிறது.
பஸ்ஸ்டாப், அரசு அலுவலக வளாக பகுதியில் இந்நிலை தொடராமல் இருக்க வேலி அமைக்க வேண்டும்.போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
கொடைக்கானல் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளை நகரின் ஒதுக்குப்புறத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும். பொது இடங்களில் மதுபோதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகை அமைக்க வேண்டும். நகராட்சி, போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுதல், பஸ்ஸ்டாப், அரசு அலுவலக வளாக பகுதியில் தடுப்பு வேலிகள் அமைப்பது, பொது இடங்களில் மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் என நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.