காவிரி கரையில் மணல் அள்ளுவதில் மோதல் ஒருவர் வெட்டிக்கொலை; 4 பேர் படுகாயம்

கரூர்: கரூர் அருகே காவிரி கரையோர பகுதிகளில், மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில், நேற்று ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் இ.வி.ஆர்., தெருவை சேர்ந்த சங்கர் மனைவி ராணி, 50; இவர், காவிரியாற்று பகுதியையொட்டிய நிலத்தில், செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, கரூர் வெங்கமேட்டை சேர்ந்த வெங்கடேசன், 37, கவியரசன், 30, விவேக், 27, மணிகண்டன், 25, ஆகிய நான்கு பேர், காவிரியாற்றின் கரையோர பகுதியில், இ.வி.ஆர்., தெருவை சேர்ந்த மணிவாசகம், 45, என்பவருக்கு சொந்தமான இடத்தில் மணல் அள்ளியதாக கூறப்படுகிறது.
மணிவாசகத்துக்கு, ராணி தகவல் கொடுத்துள்ளார். மணிவாசகம், அவரது தம்பி யோகேஸ்வரன், 40, உறவினர் ஆனந்த், 45, ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, வெங்கடேசனிடம் கேட்டுள்ளனர். அப்போது, மணிவாசகம் தரப்பினருக்கும், வெங்கடேஷன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
வெங்கடேசன் தரப்பினர் மணிவாசகம், யோகேஸ்வரன், ஆனந்த், ராணி, அவரது தாய் ராசம்மாள், 70; ஆகியோரை அரிவாளால் வெட்டி தப்பினர்.
மணிவாசகம், கரூர் அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். படுகாயமடைந்த யோகேஸ்வரன் கோவை தனியார் மருத்துவமனையிலும், ஆனந்த் கரூர் தனியார் மருத்துவமனையிலும், ராணி, ராசம்மாள் ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய வெங்கடேஷன் உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி மாநில செயலர் நன்மாறன், கரூர் கலெக்டரிடம், நிலப்பிரச்னையால் கொலை நடந்ததை போல போலீசார் திசை திருப்புவதாக மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக, வாங்கல் போலீசார், வெங்கடேசன், 41, உட்பட எட்டு பேரை கைது செய்துஉள்ளனர்.
மக்களுக்கு நேரடி மிரட்டல்
கனிமவள கொள்ளையை தடுக்க முயற்சித்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்திலேயே வைத்து வெட்டிக் கொலை செய்ததும், தி.மு.க., ஆட்சியில் தான். தற்போது இன்னொரு கொலை. மணல் கொள்ளையை தடுத்தால், கொலை செய்வோம் என்று பொதுமக்களுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் இது. கொலையில் தொடர்புடையவர்கள், மணல் கொள்ளை பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையேல் கரூர் மக்களின் எதிர்ப்பை, தி.மு.க., அரசு சந்திக்க நேரிடும்.
--அண்ணாமலை
பா.ஜ., முன்னாள் மாநில தலைவர்,


மேலும்
-
ஆக., 3 முதல் பிரேமலதா பிரசாரம்
-
சிறைத்துறை மீது புகார் அரசு விசாரிக்க வேண்டும்
-
முன்னாள் அமைச்சர் நினைவு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
-
இரண்டாவது திருமணம் செய்த கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
-
நீட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை வரை காலக்கெடு நீட்டிப்பு
-
ஏரி கரையை உடைத்து பாலம் கட்ட முயற்சி கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு