சிறுத்தை சிக்கியதால் கிராமத்தினர் நிம்மதி

ராய்ச்சூர்: இரண்டு மாதங்களாக, கிராமத்தினரை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கோழி ஆசையால் கூண்டில் சிக்கியது.

ராய்ச்சூரின், டி.ராம்புரா கிராமத்தில் பரமேஸ்வரா மலை உள்ளது. மலையில் மே 20ம் தேதி சிறுத்தை தென்பட்டது. மலையில் மயில், முயல்களை தின்றது. கிராமத்துக்குள் நுழைந்து நாய்களை வேட்டையாடியது.

டி.ராம்புரா கிராமத்தில் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் அதிகம் வசிக்கின்றனர். இதுவரை வன விலங்குகள் தொல்லை இல்லாமல், நிம்மதியாக வசித்தனர்.

ஆனால் திடீரென சிறுத்தை தென்பட்டதால், கிராமத்தினர் மலைப்பகுதியில் நடமாடவும் அஞ்சினர்.

பரமேஸ்வரா மலையில் மயில்கள், முயல்கள் அதிகம் உள்ளன. கிராமத்தில் கோழிகள், நாய்கள் உள்ளன. எனவே இந்த மலையில் சிறுத்தை நிரந்தரமாக வசிக்க துவங்கியது.

சிறுத்தையை பிடிக்கும்படி கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

வனத்துறையும் நடவடிக்கை எடுத்தது. கேமராக்கள் வைத்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர். கூண்டு வைத்து அதற்குள் நாய் மற்றும் கோழியை கட்டிவைத்தனர்.

நாயால், கோழிக்கு பாதிப்பு வராமல் கூண்டுக்குள், மற்றொரு சிறிய கூண்டு வைத்திருந்தனர். பல நாட்களாகியும் சிறுத்தை சிக்கவில்லை. இரவில் மட்டுமே நாய், கோழி வைக்கப்படும். மறுநாள் காலை வெளியே விடப்பட்டன.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கோழியை மட்டும் கட்டினர். நேற்று முன்தினம் நள்ளிரவு, சிறுத்தை கோழியை சாப்பிட வந்து, கூண்டில் சிக்கியது. இதனால் கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.

பின்னர், வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement