வன விலங்கு தாக்குதல் 5 ஆண்டில் 254 பேர் பலி
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வன விலங்குகள் தாக்கியதில் 254 பேர் இறந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
மனிதன் - வன விலங்குகள் இடையேயான மோதலை தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
புலி, சிறுத்தை, யானை நடமாட்டத்தை கண்காணிப்பது, காயம் அடைந்த விலங்குகளுக்கு உடனடி மருத்துவம் அளிப்பது, குளங்கள் அமைப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது.
குறிப்பாக, யானை கூட்டத்தில் உள்ள ஒரு யானை மீது, ரேடியோ காலரை பொருத்துவது. அதன் மூலம், யானைகள் நடமாட்டம் குறித்து, மலைவாழ் மக்களின் மொபைல் போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.
வனவிலங்கு கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கூறியதாவது:
கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வன விலங்குகள் தாக்கியதில் 254 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் யானை, புலி, சிறுத்தையால் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் கரடி, காட்டெருமை, பன்றிகளால் உயிரிழந்தனர்.
உயிரிழப்புகள், பயிர் நாசத்துக்காக 165 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விலங்குகள் மனிதர்களை தாக்குவதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
விலங்குகளின் வழித்தடங்களில் மனிதர்கள் செல்வது, காட்டு பகுதிகளுக்கு அருகில் வசிப்பது, விலங்குகளை வேட்டையாட நினைப்பது போன்றவற்றால் உயிரிழப்புகள் நடக்கின்றன.
இவ்வாறு கூறினார்.