ரூ.2,000 லஞ்சத்துக்காக வேலையை இழந்த அதிகாரி
தாவணகெரே: பி.டி.ஓ., ஒருவர் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்க ஆசைப்பட்டு, மாத சம்பளம் 50,000 ரூபாய் கிடைக்கும் வேலையை இழந்துள்ளார்.
தாவணகெரே சன்னகிரி தாலுகாவில் உள்ள சன்னபூர் கிராம பஞ்சாயத்தின் பி.டி.ஓ., எனும் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி ஹனுமந்தப்பா ஹஞ்சினமனே. இவர் மாவினகட்டே கிராமத்தை சேர்ந்த ரங்கநாத் நிலத்துக்கு, டிஜிட்டல் ஆவணங்கள் வழங்க, 2023ல் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
ரங்கநாத், லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார். ஹனுமந்தப்பா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை, லோக் ஆயுக்தா துணை நீதிபதி பி.வீரப்பா விசாரித்து வந்தார். விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஹனுமந்தப்பாவுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கும்படி மாநில அரசுக்கு லோக் ஆயுக்தா நீதிபதி பரிந்துரைத்தார்.
இதுகுறித்து, கடந்த மார்ச் 10ம் தேதி ஹனுமந்தப்பாவிடம், மாநில அரசு விளக்கம் கேட்டது. ஆனால், அவரோ, தான் எந்த குற்றமும் செய்யவில்லை; விசாரணை அதிகாரி தவறான தகவல்களை பதிவு செய்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து, விசாரணை அறிக்கை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் பி.டி.ஓ., அதிகாரி, வெறும் 2,000 ரூபாய்க்காக தன் பணியை இழந்துள்ளது குறித்து இணையத்தில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.