ஒரே ஆண்டில் 44,766 யூனிட் ரத்தம் வீண் நோய் தொற்று இருப்பதால் பயன்படவில்லை

பெங்களூரு: ஆண்டுக்கு ஆண்டு, கர்நாடகாவில் ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கடந்தாண்டு 44,766 யூனிட் ரத்தம் வீணாகியுள்ளது.

கர்நாடகாவில் 43 அரசு சார்ந்த ரத்த வங்கிகள் உட்பட மொத்தம் 230 ரத்த வங்கிகள் உள்ளன. இவற்றில் 66 அறக்கட்டளை சார்ந்தவை, எட்டு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்ந்தவை.

பொதுவாக இந்த ரத்த வங்கிகள், கல்லுாரிகள், ஐ.டி., - பி.டி., நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகையரின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் ரத்த தான முகாம்களுக்கு ஏற்பாடு செய்கின்றன. தவிர, சாலை ஓரத்திலும், வாகனத்தை நிறுத்தி ரத்த முகாம் நடத்துகின்றன.

ஆனால் இந்த வங்கிகள், ரத்த தானம் செய்வோரின் உடல் ஆரோக்கியத்தை பரிசோதிக்காமல், ரத்தம் பெறுகின்றன. சேகரித்த ரத்தத்தை ஆய்வகங்களில் பரிசோதிக்கும்போது, ஹெச்.ஐ.வி., ஹெபடைடிஸ், மலேரியா உட்பட பல்வேறு தொற்றுகள் இருப்பது கண்டறியப்படுகிறது. இது போன்ற ரத்தம், நோயாளிகளுக்கு பயன்படுத்த தகுதியற்றவை.

கடந்தாண்டு நோய் தொற்றுள்ள 44,766 யூனிட் ரத்தம், பயன்படுத்த முடியாமல் வீணாகி, அறிவியல் முறையில் அழிக்கப்பட்டது. மாநிலத்தில் ரத்தம் தேவை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உயிர்களை காப்பாற்றுவதில், ரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் இவ்வளவு ரத்தம் பயன்படாமல் வீணானது, அதிர்ச்சியை அளித்துள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ரத்தத்தில் ஏ.பி., ஏபி, ஓ.,பாசிடிவ், நெகடிவ் உட்பட, எட்டு வகை உள்ளது. ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும், ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் பெற்று, தேவையானவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

நோயால் பாதிக்கப்பட்டோர், நிரந்தரமாக மருந்து, மாத்திரைகள் உட்கொள்வோர், தொற்றுநோய் உள்ளவர்கள், புற்றுநோயாளிகள், ஹெச்.ஐ.வி., நோயாளிகள், இதய நோயாளிகள், காச நோயாளிகள், ரத்த சோகை உள்ளவர்கள், ஊட்டச்சத்து இல்லாதோர், கர்ப்பிணியர், நீரிழிவு நோயாளிகள், குடிப்பழக்கம் உள்ளவர்கள், சிறுநீரகம் உட்பட, உடல் உறுப்பு பாதிப்பு உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.

அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்கள், ரத்தம் மாற்று செய்து கொண்டவர்கள், ரேபிஸ் தடுப்பூசி போட்டவர்கள், உடலில் பச்சை குத்தி கொள்வோர், ஆறு மாதங்கள் வரை ரத்த தானம் செய்யக்கூடாது.

அதே நேரம், 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட, ஆரோக்கியமான ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்யலாம். உடல் எடை குறைந்தபட்சம் 45 கிலோ உள்ளவர்கள் 350 எம்.எல்., ரத்தம், 55 கிலோவுக்கு மேற்பட்ட எடை உள்ளவர்கள் 450 எம்.எல்., ரத்த தானம் செய்யலாம். தானம் செய்வோருக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்தபட்சம் 12.5 இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement