போக்குவரத்து விதிக்கு மரியாதை 'டெலிவரி' ஊழியர் மீது தாக்குதல்

பெங்களூரு: போக்குவரத்து விதிகளை மதித்ததற்காக உணவு டெலிவரி ஊழியரை மூன்று மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெங்களூரு, ராஜாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் பெமாரம், 35. இவர், 'ஸ்விகி' நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம் போல, உணவு டெலிவரி செய்துவிட்டு, தன் வீட்டுக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.

மோடி ஹாஸ்பிடல் சந்திப்பு அருகில் உள்ள சிக்னலில், சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததால், தன் பைக்கை நிறுத்திவிட்டு காத்திருந்தார். பைக்கின் பின்னால் நின்று கொண்டிருந்த காரில் இருந்த நபர்கள், அவரை முன்னோக்கி போக சொன்னார்கள்.

ஆனால், பெமாரம், 'போக்குவரத்து விதிகளை மதிப்பேன். சிவப்பு விளக்கை தாண்ட மாட்டேன்' எனக் கூறி பைக்குடன் அங்கேயே நின்றார்.

இதனால், ஆத்திரமடைந்து காரில் இருந்து இறங்கி வந்த மூன்று நபர்கள், பெமாரமை நடுரோட்டில் வைத்து தாக்கினர். சுமார் எட்டு நிமிடங்கள் தொடர்ச்சியாக தாக்கியதில், அவருக்கு உடம்பு, முகத்தில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.

காரில் வந்த மூவரும் தங்கள் காருடன் தப்பிச் சென்றனர். பெமாரம் கே.சி., பொது மருத்ததுமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து, அவர் பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில், தன்னை தாக்கியவர்கள் மது போதையில் இருந்ததாக குறிப்பிட்டார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அடையாளம் தெரியாத மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement