கட்சிக்கு நிதி திரட்டவே புதிய திட்டங்கள் காங்., அரசு மீது தேஜஸ்வி சூர்யா காட்டம்

பெங்களூரு: ''கட்சிக்கு நிதி திரட்டவே, மாநில காங்கிரஸ் அரசு திட்டங்களை அறிவிக்கிறது. துணை முதல்வர் சிவகுமாரின் பெங்களூரு சுரங்கப்பாதை திட்டம், காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய ஊழலாகும்,'' என, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் சுரங்கப்பாதை திட்டம் அறிவியல் பூர்வமாக இல்லை. அதன் திட்ட அறிக்கையை பார்த்தால், பல சட்டவிரோதங்கள் இருப்பது தெரிகிறது. இது கார்களுக்கான பாதையாகவே உருவாக்கப்படுகிறது.
எது தேவை?
மொத்தம் 18 கி.மீ., சுரங்கப்பாதை சாலையில், ஒரு மணி நேரத்தில், 600 முதல் 1,600 பேர் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும். பைக்குகள் அனுமதிக்கப்பட்டால், 7,500 பேர் பயணம் செய்யலாம். அதே பகுதியில் ஒரு மெட்ரோ கட்டப்பட்டால், ஒரு மணி நேரத்திற்கு, 25,000 பேர் பயணம் செய்ய முடியும்.
இப்போது நீங்களே சொல்லுங்கள், கார்கள் உள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சுரங்கப்பாதை நமக்கு தேவையா அல்லது அனைவரும் பயணம் செய்ய கூடிய மெட்ரோ தேவையா?
கட்சிக்கு நிதி திரட்டவே, மாநில காங்கிரஸ் அரசு திட்டங்களை அறிவிக்கிறது. துணை முதல்வர் சிவகுமாரின் பெங்களூரு சுரங்கப்பாதை திட்டம், காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய ஊழலாகும்.
சுரங்கப்பாதை சாலை, பணக்காரர்களுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. இதனால் ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. இது பொருளாதார தீண்டாமையாகும்.
சுரங்கப்பாதைக்கான திட்டம் தயாரிக்கும் அறிக்கை, 'சினெர்ஜி இன்ஜினியரிங்' (லயன் குரூப்) என்ற நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனம், சரியாக வேலை செய்யாததால், மத்திய பிரதேச அரசால் தடை செய்யப்பட்டதாகும். அத்தகைய நிறுவனத்தால் செய்யப்படும் திட்ட அறிக்கையை ஏற்க முடியுமா?
பெங்களூரு மாநகராட்சி விதிகளின்படி, அத்தகைய நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. இருப்பினும், அத்தகைய நிறுவனத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து பா.ஜ., போராட்டம் நடத்தும்.
பொது மக்களின் வரிப்பணம் வீணாகாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இது மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பது போன்றதாகும்.
4,000 சதவீதம்
'முடா', வால்மீகி ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம். அதுபோன்று அரசின் சுரங்கப்பாதை திட்டத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம். சுரங்கப்பாதைப் பணி என்பது 40 சதவீத வேலை அல்ல; 4,000 சதவீதம் வேலை என கணக்கிட்டு கூற முடியாத அளவுக்கு மிகப்பெரிய திட்டமாகும்.
பெங்களூரில் தற்போது 78 கி.மீ., துாரத்துக்கு மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 317 கி.மீ., ஆக இருக்கும். மஞ்சள் வழிப்பாதை மெட்ரோ தயாராகி, நான்கு ஆண்டுகளாகின்றன. இன்னும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காத நீங்கள், சுரங்கப்பாதை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளீர்கள்.
நகரில் 100 கி.மீ.,க்கு புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்று சொல்லும் நீங்கள், முதலில் நகரில் இருக்கும் மேம்பாலப் பணிகளை முடியுங்கள். எங்கள் தொகுதியில் உள்ள ஈஜிபுரா மேம்பால பணியை முதலில் முடியுங்கள். இப்படியே தொடர்ந்தால், முடிக்க 800 ஆண்டுகளாகும்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
-
அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி