ஷிராடி காட் சாலையில் கவிழ்ந்த கார் அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணியர்

ஹாசன்: ஷிராடி காட் சாலையில், ஒரு கார் நீர்வீழ்ச்சியில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

பெங்களூரை சேர்ந்த சிலர், நேற்று காலையில் காரில் ஹாசன் மாவட்டத்தின் சகலேஸ்புராவுக்கு சுற்றுலா புறப்பட்டனர். ஷிராடிகாட் சாலையில் சென்றபோது, நீர்வீழ்ச்சி காணப்பட்டது. இதை பார்ப்பதற்காக காரை நிறுத்த முற்பட்டனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், கவிழ்ந்தது.

இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த போலீசார், காரில் சிக்கியிருந்த சுற்றுலா பயணியரை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

மலைப்பகுதி மாவட்டங்களில், பரவலாக மழை பெய்கிறது. நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பல இடங்களில் சிறு சிறு நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன. வாகனங்களில் செல்லும் பலர், வாகனங்களை நிறுத்தி, நீர்வீழ்ச்சிகளை பார்க்கின்றனர். இதனால் அபாயத்தில் சிக்குகின்றனர்.

ஷிராடிகாட் போன்ற நிலச்சரிவு அபாயம் உள்ள பாதைகளில் பயணம் செய்யும்போது, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமான வேகத்தில் செல்வதை தவிர்க்கும்படியும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement