எம்.டி.எஸ்., படிப்பிற்கு முதல்கட்ட கவுன்சிலிங் 30 பேருக்கு சீட் ஒதுக்கீடு

புதுச்சேரி : முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு முதல்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்டாக் முதுநிலை பல் மருத்துவ படிப்பான எம்.டி.எஸ்., இடங்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 59 மாணவர்கள், நிர்வாக இடங்களுக்கு 32 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இம்மாணவர்களுக்கு முதல்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி நேற்று சென்டாக் சீட் ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை மகாத்மா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் 9 மாணவர்களுக்கும், மாகி பல் மருத்துவ கல்லுாரியில் 7, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் 7 என மொத்தம் 23 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாக இடங்களை பொருத்தவரை, மாகி பல் மருத்துவ கல்லுாரியில் 7 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 30 மாணவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

சீட் கிடைத்த மாணவர்கள், இன்று 15ம் தேதி 1 மணி முதல் தங்களுடைய டேஷ்போர்டு மூலம் நுழைந்து சேர்க்கை கடிதத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 17 ம்தேதி மாலை 6 மணிக்கு சீட் கிடைத்த கல்லுாரியில் சேர வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement