உளுந்துார்பேட்டையில் புதிய பஸ் நிலையம் கட்டுவது... எப்போது? பல ஆண்டுகளாக இழுபறி நிலை நீடிக்கும் அவலம்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டைக்கு புதிய பஸ் நிலையம் கொண்டு வரும் முயற்சிகள் ஆண்டு கணக்கில் இழுபறி நீடிப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


உளுந்துார்பேட்டை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், வர்த்தக விரிவாக்கத்தைத் தொடர்ந்து, சுற்றுப் பகுதிகளில் இருந்து கிராம மக்கள் நகரத்திற்கு வருகின்றனர்.

மேலும், உளுந்துார்பேட்டை பகுதி சென்னை, திருச்சி, சேலம், மதுரை, வேலுார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு வாகன போக்குவரத்திற்கான மையப்பகுதியாக இருந்து வருகிறது. இதனால், வாகன போக்குவரத்து அதிகமாகவே மாறி உள்ளது. ஆனால் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்படாமலும், மாற்று இடத்தில் கட்டப்படாமலும் உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த உளுந்துார்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலையம் இல்லாததால், சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச் சென்றனர். பின், பஸ் நிலையம் கட்டப்பட்டு அங்கு, பஸ்கள் வந்து சென்றன.

ஆனால் காலப்போக்கில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டு வருவது தொடர்கதையானது.

அதிகளவில் பஸ் போக்குவரத்து உள்ள நிலையில், பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யாததால் சாலையிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றனர்.

கடலுார், விருத்தாசலம், திருக்கோவிலுார் உள்ளூர் பகுதிக்குச் செல்லும் பஸ்கள் மட்டுமே உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்திற்குள் செல்கின்றன.

பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் சென்னை சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு செல்கின்றனர்.

பஸ்கள் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதால் பின்னால் வரும் வாகனங்கள் முன்னேறி செல்வதில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி, நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவது அன்றாட நிகழ்வாக உள்ளது. இதன் காரணமாக சொகுசு பஸ்கள் உளுந்துார்பேட்டை பகுதிக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே சென்று வருகின்றன.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது அஜீஸ் நகர் அருகே புதிய பஸ் நிலையம் கொண்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், போதிய இடம் இல்லாததால் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தை சேர்த்து பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு விளையாட்டு மைதானம் தேவை என எதிர்ப்பு தெரிவித்ததால் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

தொடர்ந்து தி.மு.க., ஆட்சி வந்த பிறகு புதிய பஸ் நிலையம் கொண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. முயற்சி மட்டுமே உள்ளது என்று நிலையில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

புதிய பஸ் நிலையம் கட்ட 6 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும் என திட்டமிடப்பட்டு அஜீஸ் நகர் ரவுண்டான அருகே மற்றும் பு.மாம்பாக்கம் அருகே என இரு இடங்களை அதிகாரிகள் மற்றும் திமு.க., பிரமுகர்கள் ஆய்வு செய்தனர்.

ஆனால் அரசியல் கட்சியினரில் பலர் மற்றும் அதிகாரிகள் திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பஸ்கள் வந்து செல்வதற்கு அஜீஸ் நகர் ரவுண்டானா இடத்தில் அமைவதற்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஒரு சில அரசியல் கட்சியினர் பு.மாம்பாக்கம் இடத்தில் அமைவற்கு அதிக ஆர்வம் கட்டி வருகின்றனர்.

இருப்பினும் எந்த இடத்திற்கு, எப்போது, புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட நிர்வாமும், மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement