ஏர் கண்டிஷனர் வேலை செய்யலை: விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்!

3

புதுடில்லி: டில்லியில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏர் கண்டிஷனர் வேலை செய்யாததால் விமானி அறைக்குள் பயணிகள் இருவர் நுழைய முயற்சித்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.


டில்லியில் இருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட்டின் எஸ்ஜி 9282 விமானம் நேற்று ( ஜூலை 14 )பகல் 12.30 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால், இரவு 7.21 மணிக்கு புறப்பட்டு மும்பைக்கு 9.05 மணிக்குதான் வந்து சேர்ந்தது.


இந்த விமானம் 7 மணிநேர தாமதத்துக்கான காரணம் சஸ்பென்ஸ் ஆக இருந்தது. தற்போது காரணத்தை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


டில்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். விமான நிலையத்தில் ஓடுதளத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் விமானி அறைக்குள் நுழைய முயற்சித்தனர்.


விமான கேப்டன், விமான ஊழியர்கள், சக பயணிகள் கோரிக்கை வைத்தும் இருவரும் இருக்கைக்கு திரும்ப மறுத்துவிட்டனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானம் மீண்டும் நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


இருவரையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர். பின்னர் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement