கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கண்காணிப்பு தீவிரம்; மருத்துவ கண்காணிப்பில் 675 பேர்; மாநில அரசு உஷார்!

1

திருவனந்தபுரம்: கேரளாவின் பாலக்காடு, மலப்புரத்தில் 3 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தொடர்பில் இருந்த 675 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


கேரளாவின் மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி 10 நாட்களுக்கு முன் பலியான நிலையில், தற்போது இரண்டாவது நபர் பலியாகி உள்ளார்.


கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், வயநாடு, கண்ணுார், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.


பாலக்காடு, மலப்புரத்தில் 3 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தொடர்பில் இருந்த 675 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில், 38 பேர் அதிதீவிர எச்சரிக்கைப் பிரிவிலும், 138 பேர் தீவிர எச்சரிக்கைப் பிரிவிலும் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


வவ்வால், பன்றி உட்பட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது. இது, மூளை மற்றும் சுவாச மண்டலத்தை தாக்கி, உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பாலக்காடு, மலப்புரம் உட்பட ஆறு மாவட்டங்கள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன.நிபா வைரஸ் தொற்று பாதிப்பை மாநில அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Advertisement