ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

புதுடில்லி: விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய யோஜனா திட்டத்திற்கு, இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
இந்த திட்டம், 2025-26 முதல் 6 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு ரூ.24,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
முதற்கட்டமாக நாட்டின் 100 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், லட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டது. விவசாய உற்பத்தித்திறன், பயிர் பல்வகைப்படுத்தல், நீர்ப்பாசனம் மற்றும் கடன் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த, 11 அமைச்சகங்களின் 36 திட்டங்களை ஒன்றிணைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் அடர்த்தி மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தது ஒரு மாவட்டமாவது தேர்ந்தெடுக்கப்படும்.
மாநிலத் திட்டங்கள் மற்றும் தனியார் துறையுடன் கூட்டாண்மை மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும்.
அதே நேரத்தில் கள வருகைகள், மதிப்பாய்வுகள் மற்றும் கண்காணிப்புக்காக மத்திய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


