முடிந்தால் என்னையும் சிறையில் அடையுங்கள்; மம்தா பானர்ஜி ஆவேசம்

கோல்கட்டா: பெங்காலி மொழி பேசும் மேற்கு வங்க மக்களை கைது செய்யும் மத்திய பா.ஜ., அரசுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். முடிந்தால் பெங்காலி பேசும் தன்னை சிறையில் அடைக்குமாறு சவால் விட்டுள்ளார்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெங்காலி மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கோல்கட்டாவில் முதல்வர் மம்தா தலைமையில் மாபெரும் கண்டன பேரணி நடத்தப்பட்டது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மழை பெய்த போதும், கொட்டும் மழையில் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு மம்தா பானர்ஜி பேரணி சென்றார். சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பேரணிக்குப் பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "இன்னும் அதிகமாக பெங்காலி மொழியில் பேச முடிவு செய்துள்ளேன். முடிந்தால் என்னை சிறையில் அடையுங்கள். அண்டை நாடான வங்கதேசத்தினர் என சந்தேகிக்கப்பட்டவர்களை கைது செய்து சிறை முகாமில் வைத்துள்ளதாக பா.ஜ., அரசு கூறியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.
'பெங்காலி பேசுவோரை எல்லாம் சிறையில் வைப்பீர்களா? மேற்கு வங்க மக்களிடம் அடையாள அட்டைகள் உள்ளன. திறமை இருப்பதால் பிற மாநிலங்களில் மேற்கு வங்க மக்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் பெங்காலி மொழி பேசியதற்காக கைது செய்ய முயற்சிக்கிறீர்கள். உங்களுக்கு இந்த உரிமை யார் கொடுத்தது? வங்காளம் இந்தியாவின் பகுதி இல்லையா, என்று கேட்டார்.









