அரசு மகளிர் பள்ளி நேரத்தில் திடீர் மாற்றம் காஞ்சிபுரத்தில் பெற்றோர் எதிர்ப்பு
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவியருக்கு, அரை நாள் மட்டுமே பள்ளி செயல்படும் என்ற, மாற்றத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,550க்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் கட்டுமானப் பணி நடைபெறுவதால், இரு நாட்களுக்கு முன், பள்ளி நேரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வழக்கம்போல முழு நாளும், ஆறு, எட்டாம் வகுப்பு மாணவியருக்கு முற்பகல் வகுப்பும், ஏழு, ஒன்பதாம் வகுப்பு மாணவியருக்கு பிற்பகல் வகுப்பும் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால், காலை 9:15 மணிக்கு துவங்கும் பள்ளி, 8:45 மணிக்கு துவங்குவதால், அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வருவதில் பல்வேறு சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இப்பள்ளியில் பயிலும் மாணவியின் பெற்றோர் சிலர் கூறியதாவது:
காலையில் அரை மணி நேரம் முன்னதாக பள்ளி துவங்குவதால், மாணவியர் அவசர அவசரமாக பள்ளிக்கு செல்வதால், காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். அரசு பேருந்தில் வரும் மாணவியர், குறித்த நேரத்தில் அரசு பேருந்து கிடைக்காததால், தனியார் பேருந்தில் பணம் செலழித்து வர வேண்டியுள்ளது.
ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவியருக்கு மதியம் 12:45 மணிக்கு பள்ளி முடிவதால், பணிபுரியும் பெற்றோர், மாணவியரை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதிலும், அதேபோல ஏழு, ஒன்பதாம் வகுப்பு மாணவியரை பள்ளிக்கு கொண்டு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
மேலும், 'டீன் ஏஜ்' மாணவியர் மதியம் பள்ளி முடிந்ததும் அழைத்துச் செல்ல பெற்றோர் வராததால், வீட்டிற்கு செல்கிறார்களா அல்லது வேறு எங்காவது செல்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, வழக்கம்போல முழுநாளும் பள்ளி நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து இப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
தினமும் காலையில் 8:45 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்பதால் எங்களது பிள்ளைகளை தயார் செய்து விட்டு, நாங்களும் அரை மணி நேரம் முன்னதாக வருவதில் சிரமம் உள்ளது.
வெளியூரிலிருந்து வருவோர் இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். இது சம்பந்தமான கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் கையொப்பமிடாத போதும் பள்ளி நேரம் மாற்றப்பட்டது.
எனவே, பழையபடி பள்ளி துவங்கும் நேரத்தை காலை 9:15 மணிக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை கோமதி கூறியதாவது:
பள்ளியில் கூடுதல் வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்டுமானப் பணி நடைபெறுவதால், மாணவியரின் நலன் கருதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியுடன், மூன்று மாதங்களுக்கு மட்டும் பள்ளி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.