குழந்தையுடன் பெண் தற்கொலை வழக்கு கணவர், மாமியாருக்கு 13 ஆண்டு சிறை
காஞ்சிபுரம்:குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு துாண்டியதாக, மாமியார், கணவருக்கு, 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த, முகலிவாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார், 38. இவர், மனைவி மகேஷ்வரி, 26, மற்றும் 9 மாத ஆண் குழந்தையுடன், வசித்து வந்தார். வீட்டில், விஜயகுமாரின் தாயார் லட்சுமி, 60, என்பவரும் வசித்து வந்தார்.
இந்நிலையில், மருமகள் மகேஷ்வரியை, வரதட்சணை கேட்டும், மன உளைச்சல் ஏற்படும் வகையிலும், மாமியார் லட்சுமி, கணவர் விஜயகுமார் ஆகியோர் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், 2015ல், வீட்டிற்கு எதிரே உள்ள கிணற்றில், 9 மாத ஆண் குழந்தையுடன் மகேஷ்வரி குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக, பெண்ணின் தந்தை புருஷோத்தமன், மாங்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, வழக்குப்பதிவு செய்து, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா வாதாடினார்.
விசாரணை முடிந்த நிலையில், இரு வேறு சட்ட பிரிவுகளின் கீழ், 10 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை, மாமியார் லட்சுமிக்கும், கணவர் விஜயகுமாருக்கும் விதித்து, மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
மேலும், இருவருக்கும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.