காயும் மக்காச்சோள பயிர்கள் மழை எதிர்பார்க்கும் விவசாயிகள்

தியாகதுருகம் : மானாவாரியில் சாகுபடி செய்த மக்காச்சோள பயிர்கள் தண்ணீர் இன்றி வாடுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி, விதைப்பு பணிகளை செய்து முடித்தனர்.

தற்போது பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர் உருவாகும் பருவத்தில் உள்ளது.

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை மக்காச்சோளர் பயிர் கதிர் முற்றும் தருவாய் வரை கை கொடுக்கும். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக மே மாதம் மாவட்டத்தில் கனமழை பெய்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்தது.

இருப்பினும் பரவலாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழை இம்மாத துவக்கத்திலிருந்தே இதுவரை பெய்யவில்லை. அதேபோல் பகல் வேளையில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் மக்காச்சோள பயிர்கள் வாடிய நிலையில் உள்ளது. பயிரில் கதிர் உருவாகி முற்றும் தருவாய் வரை மழை கை கொடுத்தால் மட்டுமே மக்காச்சோளத்தில் கூடுதல் மகசூல் பெற முடியும்.

இதனால் மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மழையை எதிர்பார்த்து கவலையில் உள்ளனர்.

Advertisement