இந்திய ஹாக்கி அணிக்கு எச்சரிக்கை: என்ன சொல்கிறார் ஸ்ரீஜேஷ்

புதுடில்லி: ''சமீபத்திய புரோ லீக் போட்டிகளின் முடிவு, இந்திய ஹாக்கி வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது,'' என, ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார்.

பீகாரில், ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆக. 27ல் துவங்குகிறது. அடுத்த ஆண்டு உலக கோப்பை ஹாக்கி (ஆக். 15-30, நெதர்லாந்து, பெல்ஜியம்), ஆசிய விளையாட்டு (செப். 19 - அக். 4, ஜப்பான்) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, சமீபத்தில் ஐரோப்பாவில் நடந்த புரோ லீக் போட்டியில் ஏமாற்றியது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், 8வது இடம் பிடித்தது.
இதுகுறித்து முன்னாள் இந்திய கேப்டன், கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் கூறுகையில், ''புரோ லீக் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். வெற்றிக்காக கடைசி வரை போராடினர். ஆனால் முடிவு நமக்கு சாதகமாக இல்லை. சிறப்பான முறையில் தயாரான போதும், வெற்றி பெற முடியாதது ஏமாற்றம். அடுத்து நடக்கவுள்ள ஆசிய கோப்பைக்கு முன், தோல்விக்கான காரணத்தை பயிற்சியாளர்கள் கண்டறிய வேண்டும். இதனை முன் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை, ஆசிய விளையாட்டுக்கு வீரர்களை தயார்படுத்த வேண்டும். அப்போது தான் மிகப் பெரிய தொடரில் சாதிக்க முடியும்,'' என்றார்.

Advertisement