பெரம்பலூர் மருதையாற்றில் கழிவுநீர்; வேடிக்கை பார்க்குது தமிழக அரசு: சீமான் குற்றச்சாட்டு

சென்னை:பெரம்பலுார் மருதையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளின் பிறப்பிடமாக உள்ள பச்சைமலைக் குன்றுகளின் கீழக்கணவாய், செல்லியம்பாளையம் பகுதிகளில் இருந்து உருவாகி புதுநடுவலூர், நொச்சியம், விளாமுத்தூர் , நெடுவாசல் வழியே பாய்ந்தோடி வரும் மருதையாறானது பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் பல சிற்றோடைகளைத் தன்னகத்தே இணைத்து வழியெங்கும் வளம் சேர்க்கிறது.
பெரம்பலூரின் அடையாளங்களுள் ஒன்றாகவும் நீர்மேலாண்மையின் சிறந்த உதாரணமாகவும் விளங்கும் சங்கிலித்தொடர் ஏரிகளில் ஒன்றான துறைமங்கலம் பெரிய ஏரியை நிரப்பி வெளியேறும் நீரானது ஓடை வழியாக நெடுவாசல் பகுதியில் மருதையாற்றோடு இணைகிறது. அவ்வோடையின் கரையில் கடந்த 2013-ஆம் ஆண்டு பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சியில் அரணாரை, துறைமங்கலம் மற்றும் நகர்ப்பகுதிகளில் என மொத்தமுள்ள 21 வட்டங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் தோராயமாக வெளியேறும் 20 லட்சம் லிட்டர் கழிவு நீரானது, நெடுவாசல் அருகே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து சேர்கிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரானது ஓடையில் விடப்பட்டு மருதையாற்றில் கலந்து கல்பாடி எறையூர், பனங்கூர், குரும்பாபாளையம் வழியே கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்குச் செல்கிறது.
இது தொடர்பாக நெடுவாசல் சுற்றுப்புற கிராம மக்கள் பலமுறை அரசிடம் மனு அளித்த பிறகும், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்த பிறகும்கூட, மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு அரசு இயற்கையின் அருங்கொடையான நதிநீரை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலை நாசப்படுத்துவது, இயற்கைக்கும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதித்த மக்களுக்கும் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
நெடுவாசலைத் தொடர்ந்து க.எறையூர், குரும்பாபாளையம் மற்றும் கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கமும் இக்கழிவுநீரால் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு சுகாதாரத் துறையோ, மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, நீர்வளத்துறையயோ, மாவட்ட நிர்வாகமோ இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும்.
ஆகவே, பெரம்பலூர் மக்களின் துயர நிலையை உணர்ந்தும், நீர்நிலைகளைப் பாதுகாத்து, நிலம், நீர், காற்று மாசுபடாமல் தடுத்து, தூய்மையான வாழிடச் சூழலை மக்களுக்கு வழங்க வேண்டியது நல்ல அரசின் தலையாய கடமை என்பதை உணர்ந்தும், திமுக அரசு மாவட்ட நிர்வாகம், நகராட்சி, சுகாதாரத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அரச நிர்வாக அமைப்புகளின் மூலம் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, கழவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேறுவதை உறுதி செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
பாதாளச் சாக்கடை கழிவுநீரைச் சுத்திகரிக்க இயலாவிட்டால், சுத்திகரிப்பு நிலையத்தை நிரந்தரமாக மூடுவதோடு, மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
தி.மலை கோவிலில் தரிசன கட்டணம் உயர்வு அமைச்சர் சேகர் பாபு தகவல்
-
தண்டவாளம் மீது தீப்பொறி விழுந்ததால் ரயில் தாமதம்
-
சேலம் வழியாக செல்லும் மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
-
தி.மு.க., நிர்வாகி திறந்த கடை கூட்டுறவு செயலர் பணி நீக்கம்
-
அனுமதியின்றி செயல்படும் மாணவர் விடுதி நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ.,விடம் மனு
-
பால் கடையில் மது விற்ற தி.மு.க., நிர்வாகி கைது