முதல்வர் ஸ்டாலின் மனசாட்சியை உலுக்கவில்லையா: இ.பி.எஸ்., கேள்வி

சென்னை: திருவள்ளூரில் சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். சிறுமி கடத்தப்படும் கொடூர காட்சி முதல்வர் மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா ? என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஊடகங்களில் வெளியாகி உள்ள சிறுமி கடத்தப்படும் காட்சி காண்போரை நடுங்கச் செய்கிறது; நெஞ்சைப் பதைக்கிறது.
இந்த கொடூரக் காட்சி முதல்வர் ஸ்டாலின் மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா?
தன்னுடைய ஆட்சியில், ஒரு பத்து வயது சிறுமியால் சாலையில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியவில்லையே என்ற வேதனையாவது முதல்வருக்கு இருக்கிறதா?
10 வயது சிறுமியால் நடமாட முடியாத ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலின், யாருடனும் இருந்து என்ன பயன்?
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு, அவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடைவதை உறுதி செய்யவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.
ஆட்சி புரிவதற்கான அருகதை துளியும் இல்லாத ஒரு கட்சியிடம், பொம்மை முதல்வரிடம் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்டெடுப்பதே, தமிழகப் பெண்களைக் காக்க ஒரே வழி!. இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.