தண்டவாளம் மீது தீப்பொறி விழுந்ததால் ரயில் தாமதம்
திருச்சி:மணப்பாறை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தீப்பொறி தண்டவாளத்தில் விழுந்ததால், மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் 25 நிமிடம் தாமதமாக சென்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில், மாரியம்மன் கோவில் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. நேற்று இந்த பாலத்தில் ஜியோ நிறுவனத்தின் கேபிள் பதிக்க, இரும்புக் குழாய் அமைத்து, ஊழியர்கள் வெல்டிங் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கேபிள் தீப்பிடித்து, தீப்பொறிகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்து, புகை பரவியது. இதை பார்த்த தண்டவாள பராமரிப்பாளர் ரமேஷ் என்பவர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, மணப்பாறை ஸ்டேஷன் மாஸ்டர் மூலம் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
அதன்படி, தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் வந்து, கேபிள் எரிந்ததை அணைத்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால், பாதுகாப்பு காரணத்துக்காக மணப்பாறை ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்டு, தீயை அணைத்த பின், 25 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
கேபிள் தீப்பிடிக்க, ஊழியர்கள் அலட்சியமாக வெல்டிங் வைத்தது தான் காரணமாக இருக்கலாம் என கூறும் மணப்பாறை போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.