பால் கடையில் மது விற்ற தி.மு.க., நிர்வாகி கைது
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பால் கடையில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து, 24 மணி நேரமும் விற்பனையில் ஈடுபட்ட தி.மு.க., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
செங்குறிச்சி குரும்பபட்டியில் மெயின் ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று முன்தினம் தமிழர் தேசம் கட்சியினர், பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அது தெரிந்தும் அதே பகுதியில் உள்ள பால் கடையில் வல்லம்பட்டி தி.மு.க., கிளை செயலரான அலெக்ஸ்பாண்டியன், 41, என்பவர், வழக்கம் போல மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனையில் ஈடுபட்டார்.
இதையறிந்த ஆர்ப்பாட்ட குழுவினர், மது பாட்டில்களை பறிமுதல் செய்து ரோட்டில் ஊற்றி அழித்தனர். கடையை சூறையாடினர்.
மது விற்ற அலெக்ஸ்பாண்டியனை பிடித்து, வடமதுரை போலீசாரிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.