அனுமதியின்றி செயல்படும் மாணவர் விடுதி நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ.,விடம் மனு
நாமக்கல், 'அனுமதியின்றி செயல்படும் மாணவர் விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 75க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என, ஒரு மாதத்திற்கு முன், முன்னாள் கலெக்டர் உமா அறிவித்திருந்தார். அதன்பின்பும், இதுவரை விடுதிகள் அனுமதி பெறாமல் செயல்படுகின்றன.
விடுதி நடத்துவதற்கு, 12க்கும் மேற்பட்ட துறைகளில் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால், விதிகளுக்கு புறம்பாக அனைத்து விடுதிகளும் செயல்படுகின்றன. அதனால், அங்கு தங்கியிருக்கும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. விதிகளுக்கு புறம்பாக செயல்படும் அனைத்து விடுதிகளையும், மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.