பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாமக்கல்லில் ஆசிரியர்கள் மறியல்: 60 பேர் கைது

நாமக்கல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 60 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழக தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழு, 'டிட்டோ-ஜாக்' சார்பில், இரண்டு நாள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று, நாமக்கல் பூங்கா சாலையில் ஆசிரியர்கள் திரண்டனர்.


மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, கார்த்திகேயன், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முத்துசாமி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருகசெல்வராசன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
அதில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்தாண்டு ஊதிய குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு, ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், 2006 ஜன., 1 முதல் மீண்டும் வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, ஊர்வலமாக சென்று பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில், 60 ஆசிரியர்களை கைது செய்த போலீசார், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Advertisement