டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு

புதுடில்லி; டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுவாக உறுதிப்படுத்துகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.



பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பஹல்காம் தாக்குதலைத தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்(The resistance Front) எனப்படும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பானது, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பாகும்.


பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அழுத்தம் காரணமாக, தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு, அந்த அமைப்பினர் சர்வதேச பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


டி.ஆர்.எப். அமைப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை பயங்கரவாத இயக்கங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கருதப்படுகிறது. இந் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரவேற்று இருக்கிறது.


இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளதாவது;


இந்த நடவடிக்கையானது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா, அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு வலுவாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.


ஏப்.22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற டி.ஆர்.எப்., அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவை பாராட்டுகிறோம். பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளவே முடியாது.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement