மாணவர்கள் உற்சாகம் கரைபுரண்ட சேற்றுக் கால்பந்து!

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் தாளூரில், சேற்றில் விளையாடும் கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள், மாணவ, மாணவியர், ஊர் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தின.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு, அய்யன்கொல்லி, தாளூர், பிதர்காடு, அமாபலமூலா பகுதி இளையோர்கள் மத்தியில் கால்பந்து போட்டி அதிக வரவேற்பு பெற்று உள்ளது. தாளூர் பகுதியில் செயல்படும் நீலகிரி கலை அறிவியல் கல்லூரியில், கடந்த 11 ஆண்டுகளாக சேற்று கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலத்தில் மழைக்காலத்தை வரவேற்கும் வகையில், அம்மாநில சுற்றுலாத் துறை சார்பில் சேற்று கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழகத்திலும் முதல் முறையாக தாளூர் கல்லூரியில், சேற்று கால்பந்து போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மழைக்கால துவக்கத்தில், கல்லூரி வளாகத்தில் உள்ள வயல்வெளியில் கால்பந்து விளையாட ஏதுவாக, உழுது அதில் தண்ணீர் நிரப்பி மாணவர்களுக்கு கால்பந்து, மாணவிகளுக்கு கைப்பந்து (ஹேண்ட் பால்) போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் மாணவ- மாணவிகள் மலையில் நனைந்தவாறு, தங்கள் திறமையை வெளிக்காட்டியது, கால்பந்து விளையாட்டில் இவர்களுக்கு உள்ள ஆர்வத்தை உணர்த்தியது.
கல்லூரி செயலாளர் ராஷித்கஷாலி கூறுகையில், ''மழைக்காலத்தில் மழையில் நனையாமலும், சேற்றில் கால் படாமலும் இளைய தலைமுறையினர் வாழ துவங்கி உள்ள நிலையில், விவசாயிகளின் கஷ்டங்களை வெளிக்காட்ட வேண்டும் எனும் வகையில் இந்த சேற்று கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
''இதில் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் சிரமம் இருந்த போதும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு விளையாடியது பாராட்டும் வகையில் உள்ளது,'' என்றார்.
இன்று நடந்த போட்டியில் 11 பிரிவுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடினார்கள். மாணவர்களுக்கான கால்பந்து இறுதி போட்டியில் பி.ஏ., ஆங்கில பிரிவு முதல் இடத்தையும், பி.காம்., சி.ஏ., 2-ம் இடத்தையும் பிடித்தனர்.
மாணவிகளுக்கான ஹேண்ட் பால் போட்டியில், முதல் இடத்தை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவும், 2- இடத்தை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவும் பெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ஷெரில் வர்கீஸ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு நெல் நாற்று நடவு செய்யும் தினத்தில் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.