உலக செஸ்: இந்தியா அபாரம்

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, திவ்யா முன்னேறினர்.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்றனர். 19 வயது திவ்யா, உலகின் 'நம்பர்-2' வீராங்கனை, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார். முதல் இரு சுற்று முடிவில் 1.0-1.0 என சமன் ஆனது. நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது.
இதன் முதல் போட்டியில் வென்ற திவ்யா, அடுத்த போட்டியை 'டிரா' செய்தார். முடிவில் திவ்யா 2.5-1.5 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஹம்பி, சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்ட்ரா மோதினர். இதில் ஹம்பி 2.5-1.5 என வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஹரிகா கலக்கல்
இந்தியாவின் ஹரிகா, உக்ரைனின் கேத்தரினாவை சந்தித்தார். 2 போட்டி முடிவில் ஸ்கோர் சமனில் (1.0-1.0) இருந்து. அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' முதல் 3 போட்டி 'டிரா' ஆனது. ஸ்கோர் 2.5-2.5 என மீண்டும் இழுபறி ஆனது. 4 போட்டியில் ஹரிகா வெற்றி பெற்றார். முடிவில் ஹரிகா 3.5-2.5 என வென்றார்.
இந்தியாவின் வைஷாலி, கஜகஸ்தானின் கமலிடெனோவாவை எதிர்கொண்டார். முதல் இரு போட்டி 'டிரா' (1.0-1.0) ஆனது. 'டை பிரேக்கரில்' முதல் 4 போட்டியில் இருவரும் தலா 2ல் வென்றனர். வைஷாலி 3.0-3.0 என சம நிலையில் இருந்தார். அடுத்த போட்டியில் வைஷாலி வெற்றி பெற்றார். முடிவில் வைஷாலி 4.0-3.0 என்ற கணக்கில் வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

Advertisement