கூட்டணி ஆட்சி ஆசை காங்கிரசிற்கும் உண்டு: சொல்கிறார் கார்த்தி எம்.பி.,

சிங்கம்புணரி:''தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான ஆசை காங்கிரசிற்கும் உண்டு'' என கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.

சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரியில் காங்., சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தி எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:

'இண்டியா' கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தமிழகத்தில் பா.ஜ., உடன் யார் கூட்டணி வைத்தாலும் தோற்று விடுவார்கள். இதனால் எதார்த்தமான ஓட்டுக்கள் கூட அ.தி.மு.க.,வுக்கு கிடைக்காது. தி.மு.க., போல காங்.,கும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும். கூட்டணி ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா கட்சிகளுக்கும் இருக்கும். அதே எதிர்ப்பார்ப்பு காங்., கட்சிக்கும் இருக்கிறது. அதற்கு, சுமூகமாக தொகுதிகள் பரிவர்த்தனை நடக்க வேண்டும். தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று எண்ணிக்கை அடிப்படையில் அந்த முடிவை எடுக்கலாம். இப்போது அது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.

காரைக்குடி -- திண்டுக்கல் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற மத்திய ரயில்வே அமைச்சரிடம் பலமுறை மனு அளித்திருக்கிறேன். மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. சிவகங்கை மாவட்டத்துக்கான ரயில் திட்டங்கள் குறித்து பழனிசாமி இங்கு வரும்போது அவரிடம் தான் கேட்க வேண்டும். காமராஜர் குறித்து கூறிய கருத்துக்கு திருச்சி சிவா விளக்கம் கொடுத்துவிட்டார். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. எனவே தி.மு.க., காங்., உறவு குறித்து அண்ணாமலை கவலைப்பட வேண்டாம்.

தமிழகத்தில் முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால் நடக்கும் கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. அவற்றை எந்த அரசாலும் தடுக்க முடியாது.

அதற்கு விசாரித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். ஆனால் கூலிப்படை மூலமாக நடக்கும் சம்பவங்களை போலீஸ் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி தடுக்க முடியும் என்றார்.

Advertisement