அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணை; போலீஸ் திணறல்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து நடக்கும் நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் தலை காட்டாத நிலையில் உள்ளூர் போலீசார் திணறி வருகின்றனர்.


ஜூன் 28ல் நகை திருட்டு வழக்கில் மானாமதுரை தனிப்படை போலீசார் கண்ணன், ராஜா, பிரபு, ஆனந்த், சங்கரமணிகண்டன் ஆகியோர் விசாரிக்கும் போது அஜித்குமார் பலியானார். இந்த கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் விசாரித்து வருகின்றனர்.


சில நாட்களாக திருப்புவனம், மடப்புரத்தில் சி.பி.ஐ.,யினர் விசாரணைக்கு வந்த போது போலீஸ் உயரதிகாரிகள் வரவில்லை. நேற்று முன் தினம் 5 கார்களில் 10 க்கும் மேற்பட்ட சி.பி.ஐ., குழுவினர் காலை 10:40 முதல் இரவு 9:00 மணி வரை விசாரணையின் போது இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மட்டுமே பங்கேற்று பதில் அளித்து வந்தார். கூடுதல் எஸ்.பி., சுகுமாறன், டி.எஸ்.பி., பார்த்திபன் போன்றோர் பங்கேற்கவில்லை.


குற்றப்பிரிவு போலீசார் வேனின் நம்பர் பிளேட் விவகாரம், வேனில் சிக்கிய மது பாட்டில்கள், சீட்டு கட்டுகள் கிடந்த விஷயத்திலும் சி.பி.ஐ., போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உள்ளூர் போலீசார் திணறினர்.

Advertisement