அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியான இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்கள் அரசு விரைந்து நிரப்ப எதிர்பார்ப்பு
விருதுநகர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இப்பணியிடங்களை அரசு விரைந்து நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் சுகாதாரத்துறையின் கீழ் நகர்ப்புற, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன.
இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் மக்கள் வசிக்கும் இடங்களில் இருந்து நீண்ட துாரத்தில் உள்ளன.
தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவில் பெரும்பாலான நேரங்களில் செவிலியர், மருத்துவ பணியாளர்கள் மட்டுமே பணியில் இருப்பர்.
ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஒரு இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் எந்த ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரமாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இவற்றில் பணிபுரிந்த நிரந்தர பணியாளர்களும் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இதனால் இரவு நேரத்தில் தனியாக பணிபுரியும் செவிலியர், மருத்துவ பணியாளரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சி.சி.டிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கடைநிலை பணியிடங்கள் கூட நிரப்பப்படாத நிலையே தொடர்கிறது.
எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.